Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது

கோவை,செப்.21: கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் கடந்த 17 முதல் துவங்கியது. இந்த தேர்வுகள் வரும் 25ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து, வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5-ம் தேதி இரண்டாம் பருவத்திற்காகத் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என ஆசிரியர்கள் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு தேர்வுகள் முடிந்து அளிக்கப்படும் விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இருப்பினும், தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த வற்புறுத்துகின்றனர். எனவே, வரும் காலாண்டு தேர்வு விடுமுறையின் போது மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது. இந்த விடுமுறை நாட்களை ஆசிரியர்கள் தங்களது காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளுக்காகவும், அடுத்த பருவத்திற்கான பாடத்திட்டங்களைத் திட்டமிடவும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். தொடர் தேர்வுகளுக்குப் பின் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் இந்த விடுமுறை முழுமையாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.