கோவை, ஆக. 21: கோவை மாவட்டத்தில் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, புலியகுளம் மகளிர் கல்லூரி, தொண்டாமுத்தூர், வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 6 அரசு கலைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கடந்த 17ம் தேதி வரை நடந்தது. இந்த கல்லூரிகளில் பல்வேறு கட்டங்களாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த 6 அரசு கலைக்கல்லூரிகளில் நடப்பாண்டில் மொத்தம் 4,382 இடங்கள் இருந்தது. இதில், தற்போது வரை நடந்த பல கட்ட கலந்தாய்வுகளின் மூலமாக 3,399 இடங்கள் நிரம்பியுள்ளன. அதாவது, 82.38 சதவீதம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில், பிளஸ்2 துணைத்தேர்வு எழுதி 35 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தற்போது, அரசு கலைக்கல்லூரிகளில் மட்டும் 983 இடங்கள் காலியாக இருக்கிறது. இந்த இடங்கள் விரைவில் நிரப்பப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதில், கோவை அரசு கலைக்கல்லூரியில் அதிகபட்சமாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இந்த கல்லூரியில் 1,996 இடங்களில் 1,883 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாணவர் சேர்க்கை வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் நடந்துள்ளது.
இந்த கல்லூரியில் மொத்தம் உள்ள 520 இடங்களில் 216 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 304 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், மாவட்டத்தில் மொத்தம் 8 அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 12,926 இடங்கள் இருக்கிறது. இதில், 10,315 இடங்கள் நிரம்பியுள்ளது. 2,611 இடங்கள் நிரம்பவில்லை. தவிர, மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் கல்லூரியில் 13 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், 3594 இடங்கள் காலியாக இருக்கிறது.



