கோவை, ஆக. 21: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் பயன் குறித்த முதல்வர் விஜய் அறிவிப்பில் திருப்தி இல்லை என வலியுறுத்தி நர்சுகள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பினர் செவிலியர்களின் கோரிக்கையான பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய வேண்டும். செவிலியர் மற்றும் செவிலியர் போதகர் பணியிடம் தொகுப்பூதிய முறையில் உருவாக்காமல், நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
செவிலியர் அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மூன்று நாட்களுக்கு காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தாரகேஸ்வரி தலைமையில் செவிலியர்கள் நேற்று ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, தங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, இன்று, நாளை என இரண்டு நாட்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.
இது குறித்து செவிலியர்கள் கூறுகையில்,“தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்து இருப்பது வரவேற்க கூடியது. ஆனால், புதிய பணியிடம் தோற்றுவிக்காமல் இந்த அறிவிப்பு பலன் அளிக்காது. மேலும், எங்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால், செவிலியர்கள் வரலாற்றில் இடம்பெறும் முதல்வராக அவர் இருப்பார்” என கூறினர்.



