Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீணாகும் குடிநீர்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

கோவை, ஆக. 20: மாநகரில் குடிநீர் வீணாகிறது, இதை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் என மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில் சரமாரி புகார் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் கணேசன், நிர்வாக பொறியாளர் ஜெகன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணகுமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில்,“காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் நடைபாதையில் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இது, பல பேரை தடுமாறி கீழே விழ வைக்கிறது. இதை, உடனடியாக சரிசெய்ய வேண்டும். செம்மொழி பூங்கா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து கிடக்கிறது. இங்குள்ள செடிகளை காப்பாற்ற வேண்டும். ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் செல்வோர் வசதிக்காக, சுமார் நான்கு இடங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும். மாநகரில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற அதற்குரிய வாகனங்களை கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றார்.

பணிக்குழு தலைவர் சாந்தி முருகன் பேசுகையில்,“ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் எல்லாமே பாதியில் நிற்கிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

கவுன்சிலர் ரேவதி பேசுகையில்,“ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதியில் சிறுவாணி குடிநீர் சாலையில் வீணாக ஓடுகிறது. இதை சரிசெய்யும்படி, சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளிடம் கூறினால் அலட்சியம் காட்டுகிறார்கள். குடிநீர் வீணாகுவதை சரிசெய்ய வேண்டும். அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில், மத்திய மண்டல நிர்வாக அலுவலர் செந்தில், உதவி பொறியாளர் சதீஷ், உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன், கவுன்சிலர்கள் மார்க்கெட் மனோகரன், வைரமுருகன், பார்த்தீபன், அலிமா பேகம், பிரபாவதி, அன்னக்கொடி, முனியம்மாள், ஜெயப்பிரதா, கமலாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.