கோவை, ஆக. 20: கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் மது போதையில் மட்டையாகும் நபர்களை குறி வைத்து திருடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து, தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்ல தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் இந்த பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து, செல்கின்றனர். மது குடிக்கும் பழக்கம் உடைய தொழிலாளர்கள் சிலர், பயணம் செய்வதற்கு முன்பு பயண அலுப்பு தெரியாமல் இருக்க, மது அருந்தி செல்கின்றனர்.
அவ்வாறு சிலர் மது அருந்திவிட்டு பஸ் நிலையம் செல்லும்போது ஓவர் போதையில் அங்கேயே மட்டையாகி விடுகின்றனர். இதனை நோட்டமிடும் கும்பல் அவர்களிடமிருந்து செல்போன் நகை பணம் ஆகியவற்றை நைசாக திருடி செல்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்லையில் நேற்று முன்தினம் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் போதையில் சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடந்த நபர் ஒருவரை நோட்டமிட்ட மர்ம நபர், யாரும் அவரை கவனிக்கவில்லை எனக்கருதி, மது போதையில் விழுந்து கிடந்தவரின் உடைமைகளை எடுத்தார், முதலில் பர்ஸ், பின்னர் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடினார்.
இதனை பேருந்துக்காக காத்திருந்த நபர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே நிலை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்திலும் ெதாடர்கிறது. எனவே போலீசார் ரோந்து சென்று, குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



