மாணவர் போராட்டங்களை ஒடுக்க அறிக்கை; தமிழக அரசுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மாணவர் அமைப்பினர் கடும் கண்டனம்
கோவை, ஆக. 20: மாணவர்களின் போராட்ட குரல்களை நசுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கைக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தலைமையில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் சூழல் உருவானது. இந்நிலையில், தமிழகத்தில் இடதுசாரி கட்சியினர், சி.ஜே.பி கட்சியினர் போராட்டங்களில் கலந்துகொள்ளும் மாணவர்களை கண்காணிப்பது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் உரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது யார்? இந்த அறிவிப்பு யார் தூண்டுதலின் பேரில் வெளியிடப்பட்டது? என மாணவர்கள் அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாம்சன் தினேஷ் கூறியதாவது:
மாணவர்களின் எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாமல் தமிழக அரசு, இப்புதிய அறிவிப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, களத்தில் நின்று போராடும் மாணவர்களின் பெயர், முகவரி மற்றும் செயல்பாடுகளை திரட்ட காவல்துறை, மாநிலக்கல்வி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இணைந்து கூட்டுக்குழு அமைத்து, தகவல்களை சேகரித்து வருகின்றன. இது, மாணவர் சமுதாயத்திற்கு விரோதமான நடவடிக்கை ஆகும்.
மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கிறது. மாணவர் நலனுக்கு எதிராக அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும், தேர்தல் காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணங்களை கட்டுப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்த ஆட்சியாளர்கள், புதிய கல்வியாண்டு தொடங்கிய பின்னரும் அதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண் துடைப்பு நாடகமாடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறியதாவது:
அரசு கல்லூரி மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனநாயக முறையில் நடைபெறும் மாணவர் போராட்டங்களை ஒடுக்குவது பாசிச நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இடதுசாரி அமைப்புகளின் போராட்டங்களை கட்டுப்படுத்த நினைக்கும் அரசு, ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பு போன்ற பிற அமைப்புகளுக்கு சாதகமாக செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மாணவர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டாலும், அதன் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மாணவர்கள், குழந்தைகளின் ஆதரவுடன் வந்த தவெக அரசு, மாணவர்களை போராடக்கூடாது என தடுப்பது மாணவர்கள் மீதான அடக்குமுறையாக பார்க்கிறோம். இந்த அறிவிப்பு ஏன் வெளியிட்டார்கள் என்பது குறித்து சட்டசபையில் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



