கோவை: கொலை, குற்றச் சம்பவங்களைக் கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை மற்றும் குற்றச் சம்பவங்களைக் கண்டித்தும், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தபெதிக., பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து அவர் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. தமிழக அரசின் 100 நாள் ஆட்சியில் 187 கொலைகள், 358 பாலியல் வன்முறைகள், 188 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 12 ஆணவக் கொலைகள் நடந்துள்ளது. இது அரசின் கையாலாகாத தனத்தை காட்டுக்கிறது. இந்த அரசின் முதல்வர் சினிமாவில் மட்டுமே கதாநாயகனாக இருக்க முடியும். நிஜத்தில் இந்த அரசின் முதல்வர் மக்களை காப்பாற்ற முடியாதவர் என்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது. இனியாவது அரசு இந்த நிலையை மாற்ற வேண்டும். போலீசார் இனியாவது பொதுமக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டும், புகார் செய்தால், புகார் செய்பவர்களை குற்றவாளிகளாக மாற்றுவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், தமிழ் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகம் நேருதாசு, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சமூக செயற்பாட்டாளர் அப்துல் ரகுமான் மற்றும் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.



