கோவை,ஆக.14:கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. ஏற்கனவே இந்த கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக கடந்த மாதம் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் சுமார் 1.20 லட்சம் பேர் சென்சஸ் வெப்சைட்டில் தங்கள் வீடுகள் தொடர்பான சுய விவரங்களை பதிவு செய்தனர். https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் சுய தகவல்களை பூர்த்தி செய்தவர்களுக்கு 13 இலக்கு எண் கொண்ட மெசேஜ் வந்துள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்பட்டது.
கட்டடம் வீட்டு விவரம் தொடர்பாக 7 கேள்விகள், குடும்ப விவரங்கள் தொடர்பாக 8 முதல் 24 கேள்விகள், குடும்ப சொத்து மற்றும் டிஜிட்டல் வசதி தொடர்பாக 25 முதல் 31 கேள்விகள், உணவு தொடர்பு தொடர்பாக 2 கேள்விகள் என 33 கேள்விகளை பூர்த்தி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு பணி 13 நாட்களாக நடந்தது. இந்த மாத இறுதி வரை கணக்கெடுப்பு பணி நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் சுமார் 26 முதல் 27 லட்சம் வீடுகள் இருப்பதாக தெரிகிறது. மாநகரில் 2900 குழுவினரும், புறநகரில் 2500 குழுவினரும் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குழுவினருக்கு 250 வீடுகள் வரை ஏரியாவிற்கு ஏற்ப ஒதுக்கப்பட்டது.
இதில் சுய கணக்கெடுப்பு விவரங்கள் சோதிக்கப்பட்டு திருத்தம் இருந்தால் அதை செய்து செயலியில் பதிவு செய்கின்றனர். சுய கணக்கெடுப்பு செய்யாதவர்களுக்கு கணக்கெடுப்பாளர்கள் தாங்களே பூர்த்தி செய்து விவரங்களை சேர்க்கின்றனர். இந்த மாத இறுதிக்குள் இந்த பணி முடியும். சிலர் வீடுகளை பூட்டி வேலைக்கு செல்வதால் கணக்கெடுப்பில் சிக்கல் நிலவுகிறது. பெரும்பாலானாவர்கள் ஆன்லைனில் சுய விவரங்களை பதிவு செய்யவில்லை. மாவட்ட அளவில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிப்பதாக தெரிகிறது. அனைவர் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. ரேஷன் கார்டு கணக்கின் படி பார்த்தால், 11.60 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கிறது. இதில் பயனாளிகளாக சுமார் 40 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘‘ வீட்டு கணக்கெடுப்பு பணி தான் இப்போது நடக்கிறது. மக்கள் தொகை, தனி நபர் குறித்த விவரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும். எனவே இந்த கணக்கெடுப்பு பணியை சிலர் குழப்பி கொள்கிறார்கள். வீட்டு கணக்கு தான் இப்போதைய தேவை. சிலர் சொந்த வீடு இருந்தாலும் வாடகை வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வசிக்காத சொந்த வீட்டை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டாம். தற்போது வசிக்கும் வீட்டை தான் இருப்பிட வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களை இந்த கணக்கெடுப்பில் சேர்க்க மாட்டோம். அவர் இந்தியா வந்தால் தான் அவர் மக்கள் தொகை, வீட்டு கணக்கெடுப்பில் இடம் பெறுவார். வீடு தொடர்ந்து பூட்டியிருந்தால் கணக்கெடுப்பில் சேர்க்கப்படமாட்டாது. யாரும் இல்லாமல் வேறு நபர்கள் சொல்வதை வைத்து கணக்கெடுப்பு செய்யமாட்டோம். அனைத்து விவரங்களும் செயலியில் பதிவு செய்யப்படும், ’’ என்றனர்.



