தொண்டாமுத்தூர், ஆக.13: பேரூரில் ஆடி அமாவாசை வழிபாடு முன்னிட்டு தர்ப்பண கட்டணம் விவகாரத்தில் புரோகிதர்கள் பக்தர்கள் மோதியதால் பரபரப்பு நிலவியது. கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் 2,000 ஆண்டுகள் பழமையானது. மேலை சிதம்பரம் என போற்றப்படும் இக்கோயிலில் பிறவா புளி, இறவா பனை, காஞ்சிமா நதியில் எலும்புகளை போட்டால் கல்லாக மாறுதல், பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் மனநலம் பாதிப்பு தீரும், இக்கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டது இந்த கோயில். வருடம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பட்டீஸ்வரர் பச்சைநாயகி அம்மனை தரிசித்து செல்கின்றனர். கல் சங்கிலி, அரிய வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டு சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக இந்த கோயில் விளங்குகிறது. முக்கிய விழாவான ஆடி அமாவாசை வழிபாடு நேற்று அதிகாலை தொடங்கியது. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு கிடந்தது.
பேரூர் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஷவர் பாத்தில் குளித்தனர். பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை தலைமையில் தூய்மை பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றினர். தர்ப்பணம் மண்டபத்தில், இறந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதல் மதியம் வரை பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர் கேரள பக்தர்கள் அதிகாலையில் திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் தர்ப்பண கட்டணம் நிர்ணயம் செய்யப்படாததால் புரோகிதர்களுக்கும் பக்தர்களுக்கும் கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.
அப்போது கட்டண பட்டியலை ஏன் வைக்கவில்லை என பக்தர்கள் கேள்வி எழுப்பினர். தனியாக தர்ப்பணம் செய்தால் ரூ.5 ஆயிரம் எனவும் குழுவாக அமர்ந்தால் ரூபாய் ஆயிரம் எனவும் புரோகிதர்கள் வசூல் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் முறையான பார்க்கிங் வசதி செய்யப்படாததால் கார்கள் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக சிறுவாணி ரோட்டில் நிறுத்தி இருந்தனர். கார், வேன் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக நடந்து சென்று தர்ப்பணம் செய்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து கட்டுப்படுத்த பேரூர் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஆடி அமாவாசை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன. ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவையில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் உள்ளிட்ட முக்கிய அம்மன் கோயில்களில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், சந்தனம், இளநீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதனால், நேற்று காலை முதலே கோயில்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. மேலும் பலர் தங்களது குலதெய்வ கோயில்களுக்கு சென்று அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.



