கோவை, ஆக.13: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஏமாற்றி வருவதால் குளங்கள் வறண்டு கிடக்கிறது. நிலத்தடி நீர் சட்டம் சரிகிறது. விவசாயிகள் தவிப்படைந்துள்ளனர். கோவையில் துவங்கும் நொய்யல் ஆறு 180.50 கி.மீ தூரம் பாய்ந்து, காவிரியில் கலக்கிறது. கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆதாரத்தில் 28 குளங்கள், 23 அணைக்கட்டு, 2 நீர்தேக்கம் உள்ளன. இவை, 18,386 ஏக்கர் பாசன பரப்புக்கு நேரடி நீர் சப்ளை செய்கிறது. மேலும், 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மறைமுக பாசனத்திற்கு உதவியாக இருக்கிறது. கோவை மாநகரில் உள்ள 8 குளங்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2009ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.
நீலி, புதுக்காடு, சித்திரைசாவடி, குனியமுத்தூர், கோவை குறிச்சி, வெள்ளலூர், சிங்காநல்லூர், ஓட்டர்பாளையம், இருகூர், சூலூர், ராசிபாளையம், மாதப்பூர், சாமளாபுரம், கருமத்தம்பட்டி, பள்ளபாளையம், செம்மாண்டம்பாளையம், மங்கலம், ஆண்டிப்பாளையம், மண்ணரை பாசன வாய்க்கால் 94 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் நடத்தியும் பல இடங்களில் நீர் பாய முடியாத நிலை இருக்கிறது.
நொய்யல் மேற்கு பகுதியில் உள்ள நீலி, புதுக்காடு, உக்குளம், நரசாம்பதி, கொலராம்பதி குளங்கள் வறட்சியில் இருக்கிறது. நகர்ப்பகுதி குளங்கள் சாக்கடை நீர் கலந்து, கருப்பு, பச்சை கலரில் அசுத்த நாற்றத்துடன் இருக்கிறது. கிழக்கு பகுதியில் உள்ள இருகூர், சாமளாபுரம், செம்மாண்டம்பாளையம் குளம் போன்றவையும் சாக்கடை நீரால் தேங்கி இருக்கிறது. தென்மேற்கு பருவ மழை, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஏமாற்றம் தருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில், சிறுவாணி அணை பகுதியில் கணிசமாக மழை பெய்த போதிலும் மாவட்டத்தின் உள் பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால், குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் சரிய துவங்கிவிட்டது. தற்போது கோடை கால சீசன்போல் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில குளங்களில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்இருப்பு குறைந்து வருவதால், இந்த குளங்களில் மீன்கள் உயிர் வாழ்வது பெரும் சவாலாக மாறி விட்டது.
மாநகரின் மைய பகுதியில் உள்ள குளங்களில் 20 முதல் 35 சதவீதம் நீர் தேக்கம் இருப்பதாகவும், சாக்கடை நீர் தேங்கியிருப்பதால் அசுத்தம் அதிகமாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால், மாவட்ட அளவில் நொய்யல் நீராதார பகுதி விளைநிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. கிணறுகள், போர்வெல்லில் 50 அடி வரை நீர் மட்டம் சரிந்துவிட்டது. வறண்ட வானிலையால் விவசாயிகள் தவிப்படைந்துள்ளனர். மழை வருமா? வராதா? என்ற ஏக்கத்தில் பெரும்பாலான விளைநிலங்களில் சாகுபடி, விதைப்பு பணிகள் செய்யாமல் தவித்து வருகின்றனர். நொய்யல் கரையோரம் மற்றும் குளத்து பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள்கூட சாகுபடி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நொய்யல் வாய்க்கால், தடுப்பணை ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டது. நொய்யல் மேற்கு, கிழக்கு பகுதி குளங்கள், வாய்க்கால்கள், தடுப்பணைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மழை நீர் பாயும் வகையில் நீர் பாதைகள், வாய்க்கால்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கிவிடும் என எதிர்பார்த்திருக்கிறோம். ஆனால், தாமதமாகி வருகிறது. மழை பெய்தால் முழு அளவில் குளங்களுக்கு நீர் கொண்டுசெல்லும் வகையில் ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது. எந்த இடத்திலும் குளம், வாய்க்காலில் அடைப்பு, தடை இல்லை. மழை பெய்தால்தான் குளங்களின் நீர் மட்டம் உயரும். நொய்யல் ஆற்றில் முழு அளவில் நீர் பாய வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.



