அன்னூர் பைல் 1 பூட்டிக்கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்; மக்கள் ஏமாற்றம்
அன்னூர், ஆக.12: அன்னூர், சத்தி சாலையில் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ளாட்சி செயலர், 100 நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பெரும்பாலான நேரம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தால் மீட்டிங், களவேலை என காரணம் தெரிவித்து அலுவலகத்தை மூடிவிட்டு அலுவலர்கள் சென்று விடுகின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்து அதன் பிறகே ஊராட்சி மன்ற அலுவலர்களை பார்க்க வேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்தை குறித்த நேரத்தில் திறந்து செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.