கோவை, ஆக.12: தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் நாளை (13ம் தேதி) காலை 10 மணியளவில், பொள்ளாச்சி தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி மையத்தில் நடக்கவுள்ளது. தென்னை நார் மற்றும் தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மாவட்டத்தினை ஏற்றுமதி முகமாக மாற்ற தமிழ்நாடு அரசானது மத்திய அரசுடன் இணைந்து முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தென்னை நார் தொழில் நிறுவனங்களிடையே ஏற்றுமதி பற்றிய விழிப்புணர்வு மற்றும் மத்திய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களான நிர்யாத் புரோத்சாக் மற்றும் நிர்யாத் திசா திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்னை சார்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மற்றும் ஏற்றுமதியில் ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



