Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலில் காயங்களுடன் ரோட்டில் தவித்த நோயாளி

கோவை, ஆக.12: கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டில் 60 வயது மதிக்கதக்க நபர் காலில் காயங்களுடன் கட்டு போட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இலவச சேவை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ சேவை ஊழியர்கள் அங்கே சென்று பார்த்தனர். அவரிடம் அக்கம், பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது, கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வாசுதேவன் என தெரியவந்தது. இவர், ஏற்கனவே குறிச்சி குளம், வாலாங்குளத்தின் கரையில் தங்கியிருந்தவர் என தெரிகிறது. ஆதரவு இல்லாத இவர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். தவறி விழுந்தோ, வாகனம் மோதியோ இவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த காயம் தொடர்பாக அவரால் சரியாக பதில் தர முடியவில்லை. காயம் காரணமாக நடக்க முடியாத நிலையில் வாசுதேவன் தரையில் தவழ்ந்த படி சென்று வருகிறார். அவருக்கு உணவு கிடைக்காததால் பட்டினியுடன் தவித்து வருவது தெரியவந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில்,‘‘ஏற்கனவே இவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் இவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து விட்டார். அவர் திடீரென தாக்குதல் நடத்துவார். அவரை கட்டுப்படுத்துவது சிரமம். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாது’’ எனக்கூறி விட்டனர்.

மேலும், அந்த நபரின் காலில் அதிக காயம் இருப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. கால் இழக்க வேண்டிய சூழலும் இருக்கிறது. எனவே நோயாளியை காப்பாற்ற வேண்டும் என உக்கடம் பகுதி மக்கள் தெரிவித்தனர். நோயாளி மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம், அவரிடம் பேசி புரிய வைத்து சிகிச்சை வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தினரை கண்டறிய வேண்டும். பிளாட்பாரவாசி என அலட்சியப்படுத்த கூடாது என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.