Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35 ஆயிரம் பேர் எழுதினர்

கோவை, மார்ச் 3: கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வினை பள்ளிகள் மூலம் 35 ஆயிரத்து 257 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கியது. இந்த தேர்வு வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வினை கோவை மாவட்டத்தில் 130 மையங்களில் 365 அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 19,344 மாணவர்கள், 16,368 மாணவிகள் என 35,712 மாணவர்களும், 852 தனித்தேர்வர்களும் என மொத்தம் 36,564 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர்.

இந்நிலையில், தேர்வினை பள்ளிகள் மூலம் 35,257 மாணவ, மாணவிகள் எழுதினர். 455 பேர் மொழிப்பாட தேர்வினை எழுதவில்லை. மேலும், தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உள்பட 2,600க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் ஸ்கிரைப் 343 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். பொதுத்தேர்வின் போது முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும், வரும் 5-ம் தேதி ஆங்கில பாடத்திற்கான தேர்வுகள் நடக்கிறது. இந்நிலையில், கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் அவர் பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.