பாதாள சாக்கடை, மேம்பால பணியின்போதுபள்ளத்தில் மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி : பம்மல், பாடி பகுதியில் சோகம்
சென்னை: தாம்பரம் மாநகராட்சி சார்பில் பம்மல், அண்ணா நகர், இளங்கோ தெருவில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று பிற்பகல் சுமார் 10 அடி பள்ளத்தில் குழாய்கள் பதிக்கும் பணியில் சேலத்தை சேர்ந்த அருள் (45) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கரையில் குவித்து வைத்திருந்த மண் குவியல், பள்ளத்தில் இருந்த அருள் மீது மொத்தமாக சரிந்துள்ளது. இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அருள் மயங்கினார். சக தொழிலாளர்கள், உடனடியாக மண்ணை அகற்றி, அருளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், முடியாததால் தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் இயந்திரம் கொண்டு, சுமார் ஒரு மணி நேரம் போராடி, பள்ளத்தில் இருந்த மண்ணை அகற்றி, அருளை மீட்டனர். பின்னர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டபோது, அருள் மூச்சுத் திணறி பலியானது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார், அருள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்ற நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: பாடி தாதன்குப்பம் மேம்பால விரிவாக்க பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று பள்ளம் தோண்டும் பணியில் விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ் (26) ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்ேபாது, எதிர்பாராத விதமாக பள்ளத்தின் மேல் குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து அவர் மீது விழுந்ததால் மண்ணுக்குள் புதைந்தார். சக தொழிலாளர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம், 30 நிமிடம் போராடி மண்ணை அகற்றி, மயங்கிய நிலையில் சுரேஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


