Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் நம்ம ஊரு திருவிழாவுக்கு கலை குழுக்கள் தேர்வு: சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகள், அயல் மாநில நாட்டுப்புற கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை- நம்ம ஊரு திருவிழா சென்னை 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது.

இவ்வாண்டும் மேற்காண் 8 இடங்களிலும் இக்கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் (22, 23ம் தேதிகளில்) காலை 10 மணி வரை முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசு இசைககல்லூரி வளாகத்தில் இத்தேர்வுக்கான வீடியோ பதிவு நடைபெற உள்ளது. நாளை (22ம் தேதி) நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் பங்கு பெறலாம்.

நாளை மறுநாள் (23ம் தேதி) தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளின் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் விவரங்களை கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வாயிலாக அறியலாம். கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது.

ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டு துறையால் அமைக்கப்படும் தேர்வு குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு 2026ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள். கலை பண்பாட்டு துறை அளித்துள்ள இந்த வாய்ப்பை அனைத்து நிகழ்த்து கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.