உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்: பொது அஞ்சலக முதன்மை அதிகாரி அறிவிப்பு
தண்டையார்பேட்டை, நவ.6: ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம், ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய உயிர் வாழ் சான்றிதழ் வழங்குவதற்காக பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள பொது அஞ்சலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை பொது அஞ்சலக முதன்மை அதிகாரி சுவாதி மதுரிமா கூறியதாவது: பொது அஞ்சலகத்தில் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் செலுத்தக்கூடிய உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க பொது அஞ்சலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று முகம், கைவிரல் ரேகை ஆகியவை எடுத்து சான்று பெறப்படுகிறது.
இதற்கு ஓய்வூதியதாரர்கள் ₹70 செலுத்த வேண்டும். மேலும் ஆங்காங்கே உள்ள அஞ்சலகத்திலும் இதுபோல் ஓய்வூதியதாரர்கள் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்கலாம். இந்த முகாம் இந்த மாதம் 30ம் தேதி வரை நடைபெறும். ஓய்வூதியதாரர்கள் அலைச்சல் இன்றி உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க பொது அஞ்சலகம் இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளது. இதனை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.