Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சொத்து, குடிநீர் வரி செலுத்துவதில் சிரமம்:சீர்செய்ய கோரிக்கை

பல்லாவரம்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் சொத்து, குடிநீர் வரி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 12,620 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், வசிக்கும் பொதுமக்கள் முன்பெல்லாம் தங்களது வீட்டிற்கான சொத்து வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று செலுத்தி, ரசீது பெற்று வந்தனர்.பொதுமக்களே நேரடியாக ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று வரிகளை பணமாக செலுத்தி வந்த நிலையில், அதில் ஏற்படும் முறைகேடுகளை களைவதற்காக தமிழக அரசு கடந்த ஆண்டு வி.பி.டேக்ஸ் என்னும் ஆன்லைன் பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வீட்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே செலுத்த வழிவகை செய்தது. மக்களின் நேரம் விரயமாவது தடுக்கப்பட்டதுடன், அதில் ஏற்படும் முறைகேடுகளும் தடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த ஆன்லைனில் சிறு மாறுதல்கள் செய்வதற்காக அரசு வரி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அத்துடன் அந்த ஆன்லைனில் சில அப்டேட்களும் செய்து, கடந்த வாரம் அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது சொத்து வரி, குடிநீர் வரை ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்தி வந்தனர்.

ஆனால், தற்போதைய ஆன்லைனில் சில அப்டேட்டுகள் தற்போது வரை செய்யப்படாததால், சொத்து வரி மற்றும் குடிநீர் வரியில் பிழை திருத்தம் செய்வது, முகவரி மாற்றம் செய்வது போன்ற திருத்தங்களை செய்ய முடியாமல் பயனாளிகள் தவித்து வந்தனர். இந்த, அப்டேட்டுகள் குறித்த போதிய அறிமுகம் இல்லாததால், அது குறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களில் சிலர், அங்கு பணியில் இருக்கும் ஊராட்சி தலைவரிடமோ அல்லது ஊராட்சி செயலரிடமோ கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அன்றாடம் காண முடிகிறது.

இதனை கருத்தில் கொண்டு அரசு வி.பி ஆன்லைன் என்று கிராம ஊராட்சிகளுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தும் ஆன்லைன் தொழில் நுட்பத்தில் முறையாக திருத்தம் மற்றும் அப்டேட் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்க வேண்டும் என்று கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால், சொத்துவரி மற்றும் குடிநீர் வரி மூலம் அரசுக்குக் கிடைக்கக் கூடிய வரி வருவாயும் பல மடங்கு உயரும், பொதுமக்களின் நேரமும், காலமும் விரயமாவது கணிசமாக குறைக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.