Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண வல்லுநர்களுடன் ஆலோசனை: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு, நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக அனைத்து அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 150 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இந்தியாவிலேயே ஒரே நாளில் 50 இருந்து 66 நாய்களுக்கு கருத்தடைகள் தமிழகத்தில்தான் செய்யப்படுகிறது. விலங்குகள் நல வாரிய விதிமுறைகள் படி நாய்களுக்கு கருத்தடை செய்வதால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும். மற்ற நாடுகளில் இருப்பது போன்று எந்த நாய்களையும் நாம் அப்புறப்படுத்த முடியாது. அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடித்ததற்கு பின், நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக அனைத்து அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அண்மைக்காலமாக முறையான சான்றிதழ்களை பெறுவது கிடையாது. பாதுகாப்பற்ற முறையில் செல்லப்பிராணிகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என்பதை தெரிவித்தும் அதன் உரிமையாளர்கள் பின்பற்றுவது கிடையாது. செல்லப் பிராணிகளை நாம் வெளியே அழைத்துச் செல்லும் போது சாதகமான சூழல் இருந்தாலும் அவை மற்றவர்களுக்கு பாதகம் விளைவிக்கும். அதனால் நாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

அனைவருக்கும் சட்ட விதிமுறைகள் மட்டுமே கூறிக் கொண்டிருந்தால் நாய்க்கடி விவகாரத்திற்கு தீர்வு கிடைக்காது. அதனால் எந்தெந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டு வரலாம் என நீதிமன்றத்தை அணுக உள்ளோம். சென்னையில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நாய்கள் கணக்கெடுப்பு செய்யப்படும். சென்னையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாய்களுக்கு முகக் கவசம் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. நாய்களை கயிறு கட்டி வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை மட்டுமே கூற முடியும். அந்த நாய்க்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே முகக் கவசம் அணிய வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. நாய் ஆர்வலர்கள், நாய் கடிக்காது என கூறுவது தவறான கருத்து. நாய் வளர்ப்பவர்களை நாய் கடிக்காமல் இருக்கலாம், பொது இடங்களுக்கு செல்லும்போது தெரு நாயாக இருக்கட்டும், செல்லப் பிராணிகளாக இருக்கட்டும் மற்றவர்களை கடிக்கக்கூடும். எனவே உரிமையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.