Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சித்திரை மாத பிரமோற்சவ விழா திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்

பல்லாவரம்: சித்திரை மாத பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, திருநீர்மலையில் உள்ள ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 23ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பெருமாள், தாயாருடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான சித்திரை மாத தேரோட்டம் விழா நேற்று முன்தினம் காலை நடந்தது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘‘கோவிந்தா, கோவிந்தா” என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் நான்கு மாட வீதிகள் வழியாக திருநீர்மலையை சுற்றி உலா வந்து, மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, பக்தர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் குளிர்பானங்கள், நீர், மோர் ஆகியவற்றை இலவசமாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோயில் சார்பில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லெட்சுமிகாந்த பாரதிதாசன், தக்கார் நித்யா, இணை ஆணையர் வான்மதி, செயல் அலுவலர் குமரவேல் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சங்கர் நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.