Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா திமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்றைக்கு நாட்டையே அதிர வைத்திருக்கிறது. ‘ரூ’ என்று சொன்னவுடன் ஒன்றிய அமைச்சர் அலரும் சத்தம் கேட்டு டெல்லி அதிகாரத்தையே கிடுகிடுக்க வைத்து விட்டது. இதை நாம் கண்கூடாக பார்த்தோம். நம்முடைய முதல்வர், ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. அநாவசியமாக பயப்படாதீர்கள். ‘ரூ’ என்பது ரூபாயை குறிக்கின்ற ஒரே ஒரு சொல்தான்,’ என்று சொன்ன பிறகுதான் டெல்லி இன்றைக்கு மூச்சு வாங்கி அமர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய நிதிநிலை அறிக்கையை அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 9,335 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது ஒன்றிய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும். சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறாத இடமே இல்லை. எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசு நிதி தரவில்லை. இருந்தாலும் இவ்வளவு நிதி நெருக்கடியிலும், நமது அரசால் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாம்பரம் மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி உயர்வு என்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்து தர வேண்டும். தாம்பரம் பெரிய ஏரி, கடப்பேரி ஏரி, எட்டித்தாங்கல் ஏரி ஆகிய ஏரிகளை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்தி, விரைவில் பணிகளை துவங்க வேண்டும். தாம்பரம் தொகுதி மப்பேடு முதல் வேங்கடமங்கலம் வரை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும். தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை பகுதியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.