Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: நில புரோக்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அண்ணாநகர், ஜூன் 18: வில்லிவாக்கத்தில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் பண மோசடி வழக்கில் நில புரோக்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை அளித்து எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.  திருநின்றவூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(75). இவர் கடந்த 2013ம் ஆண்டு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது, நான் மற்றும் எனது நண்பர்கள் என 8 பேரிடம் காலி வீட்டுமனைகள் வாங்கி தருவதாக கூறி ஒருவர் எங்களிடம் இருந்து ரூ. 4,45,000 லட்சத்தை பெற்றுக் கொண்டார். வெகு நாட்களாகியும் எங்களுக்கு வீட்டுமனைகள் வாங்கி தராமல் காலதாமதம் செய்து வந்தார். பின்னர் எங்களிடம் பணம் பெற்று கொண்டு மோசடியி்ல் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் பண மோசடி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது நில புரோக்கர் நூர்தீன்(43) என்பவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நூர்தீனை கடந்த 2013ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த நில சம்பந்தமான வழக்கு, எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முழு விசாரணை முடிவடைந்த நிலையில், நூர்தீனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.