Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலை செய்த கடையில் 6 ஐபோன், ரூ.1 லட்சம் திருடிய கேஷியர் கைது

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் அருகே வேலை செய்த கடையின் பூட்டை உடைத்து 6 ஐபோன் உள்பட செல்போன்கள், ரூ.1 லட்சம் திருடிய கேஷியரை போலீசார் கைது செய்தனர்.ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (31). இவர், வெட்டுவாங்கேணி பகுதியில் உள்ள பிரபல செல்போன் கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி காலை, கடையை திறக்க வந்துள்ளார்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த 6 ஐபோன்கள் மற்றும் 1 சாம்சங் செல்போன் என 7 செல்போன்கள் மற்றும் ரூ.1 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பிரேம்குமார், நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஆடை இல்லாமல் ஒருவர் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் கடை ஊழியர்களின் கைரேகையை போலீசார் பரிசோதித்தபோது முகமது தலஹா என்பவரின் கைரேகை ஒத்துப்போனது. அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது முதலில் திருடவில்லை என கூறிய அவர், நீண்ட விசாரணைக்கு பின் செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய முகமது தலஹா, 13 வருடங்களாக இந்த செல்போன் நிறுவன கிளைகளில் வேலை செய்து வந்துள்ளார். பணத்தேவை இருந்ததால் செல்போன்கள் மற்றும் கடையில் வசூலான ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடி அக்கரையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகில் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து 7 செல்போன்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.