Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா, பெங்களூரு, புனே விமானங்கள் தாமதமாக இயக்கம்: பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று முன்தினம் இரவு 7.40 மணியளவில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. அதில் 148 பேர் பயணிக்க வந்தனர். ஆனால், விமானம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானம் எப்போது புறப்படும், எதற்காக தாமதம் என்று எந்த தகவலும் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.

இதனால் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் விடிய விடிய காத்திருந்தனர். விமானத்தில் பயணிக்க இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள், தங்கள் விமான பயணங்களை ரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். அதன் பின்பு, அந்த விமானம் சுமார் 8 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 4 மணியளவில் 110 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்டு சென்றது.

அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 9.25 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். அந்த விமானத்தில், சுமார் 120 பயணிகள் செல்ல இருந்தனர். அந்த விமானமும் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்பு அந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக பெங்களூரு புறப்பட்டு சென்றது.

இதுபோல, சென்னையில் இருந்து புனே செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சென்னையில் இருந்து புனே புறப்பட்டு சென்றது. சென்னை விமான நிலையத்தில், ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள், ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 8 மணிநேரம் வரை தாமதமானதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.