Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மது அருந்த பணம் தராத தகராறில் நண்பனை அடித்து கொன்ற 5 பேர் கைது

வேளச்சேரி, ஜன.24: பெரும்பாக்கம் எழில் நகரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு யு.பிளாக் பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் இரவு தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் உயிருக்கு போராடுவதாக, பெரும்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் பெரும்பாக்கம் எழில்நகர் எஸ்.பிளாக் பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் (25) என்பது தெரியவந்தது. அவரை மீட்டு உடனடியாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, வரும் வழியில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், கார்த்திகேயன் பழைய குற்றவாளி என்பதும், ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் குமார் (27), விஜயகுமார் (28), சரத் (எ) சரத்குமார் (35), சரண்ராஜ் (எ) கோகுல் (29), கார்த்திக் (26) ஆகியோருடன் அங்குள்ள பூங்காவில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து, தலைமறைவாக இருந்த அந்த 5 பேரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

அதில், இவர்கள் குடியிருக்கும் பகுதியில் பாபு என்பவர் இறந்துவிட்டார். இவரது சாவில் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடியுள்ளனர். போதை இறங்கிய நிலையில் கார்த்திகேயன் மீண்டும் மது அருந்த குமாரிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால், கார்த்திகேயன், குமார் சட்டை பாக்கெட்டில் கையைவிட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, குமாரின் சட்டை பாக்கெட் கிழிந்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து நண்பர்களான விஜயகுமார், சரத் (எ) சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து கார்த்திகேயனை தேடியுள்ளார்.

கார்த்திகேயன் யூ பிளாக் பகுதியில் உள்ள பூங்காவில் மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. அங்கு சென்றவர்கள் கார்த்திகேயனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, கார்த்திகேயன் வைத்திருந்த மதுபாட்டிலால் 5 பேரையும் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த 5 பேரும் சேர்ந்து பீர்பாட்டில் மற்றும் கல்லால் கார்த்திகேயனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர், மயங்கி கீழே விழுந்ததும் பெரிய கல்லை எடுத்து அவர்மீது போட்டுவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.