பெரம்பூர், ஆக.21: புளியந்தோப்பு கே.பி.பார்க் எப். பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (38), சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். மேலும், மாலை நேரத்தில் கண்ணப்பன் திடல் அருகே சாலையோரத்தில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், வீட்டை பூட்டி விட்டு டிபன் கடைக்கு வியாபாரம் செய்ய சென்று விட்டார்.
நள்ளிரவு 1 மணி அளவில் வியாபாரம் முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் லாக்கர் உடைத்து ரூ.46 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செல்வி, பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.




