பெரம்பூர், ஆக.19: திருவிக நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி(75). இவர் தனது மகன் கோபிநாத், மருமகள் தேவி, பேத்தி தீபிகா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபிநாத், தேவி ஆகியோர் திரிபுரசுந்தரிக்கு சரியான உணவு வழங்காமல் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திரிபுரசுந்தரியை அவரது மருமகள் தேவி மற்றும் மகன் கோபிநாத் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து காயப்படுத்தி வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர்.
குடும்பத்தினர் தாக்கியதில் காயமடைந்த திரிபுரசுந்தரி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்ததில், மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் திரிபுரசுந்தரியை கொடுமைபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கோபிநாத், தேவி, தீபிகா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



