சென்னை, நவ.15: மயிலாப்பூர் பஜார் சாலையில் மோகன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு, டீ குடிக்க நேற்று முன்தினம் மதியம் முதியவர் ஒருவர் வந்துள்ளார். அப்போது தெருவில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று முதியவரை விரட்டி கடிக்க பாய்ந்தது. இதை கவனித்த டீக்கடை உரிமையாளர் மோகன், நாயை விரட்டி முதியவரை காப்பாற்றினர். அப்போது மோகனையும் தெரு நாய் கடிக்க பாய்ந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் கடையில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து நாயை கடுமையாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்தது. பிறகு நாய் உடலை அருகில் உள்ள குப்பை தோட்டியில் வீசினார். இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது, வைராக பரவியது.
இதுகுறித்து திருவான்மியூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கீர்த்தனா சம்பவம் குறித்து வீடியோ கட்சிகளுடன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் பஜார் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது, டீக்கடை உரிமையாளர் தெரு நாயை கொடூரமாக அடித்து கொன்றது உறுதியானது. அதைதொடர்ந்து, டீக்கடை உரிமையாளர் மீது 325 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
