வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
திருவொற்றியூர், நவ.12: சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எழிலன், மணலி காவல் சரகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியாற்றியபோது, மணலி எம்எப்எல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பைக்கில் வந்த எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம், மது அருந்தியுள்ளாரா என கருவி மூலம் சோதனை செய்துள்ளார். அதில், மணிமாறன் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்துள்ளார். அப்போது, அவருடன் இருந்த சகோதரர் பன்னீர்செல்வம் என்பவர், திடீரென உதவி ஆய்வாளர் எழிலனிடம் வாக்குவாதம் செய்து, அவரையும், அவருடன் பணியாற்றிய காவலர் ஜெகன் ஆகியோரையும் தாக்கியுள்ளார். இதுசம்பந்தமாக மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், பன்னீர்செல்வத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், விதித்து குற்றவியல் நடுவர் நீதிபதி கார்த்திக் தீர்ப்பளித்தார்.