தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் மிகப்பெரிய அளவில் மரங்கள் நடும் நிகழ்ச்சி: 38 மாவட்டங்களில் ஆக.15வரை நடைபெறுகிறது
சென்னை, ஆக. 12: உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து மாவட்ட அளவிலான, தாலுகா அளவிலான நீதிமன்ற வளாகங்களில் மிகப்பெரிய அளவில் மரங்களை நடும் நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி தொடங்கியது. வரும் 15ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துவருகிறது. நீதிபதிகள் குடியிருப்புகளிலும் மரங்கள் நடப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி உத்தரவின் அடிப்படையில் இந்த மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு ஏற்று நடத்தும் இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை முதன்மை வனக்காப்பாளர் மற்றும் மாவட்ட வன அதிகாரிகள், தமிழக வேளாண்துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் 38 மாவட்டங்களில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும் என்று சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



