பெரம்பூர், ஆக.12: அயனாவரம் காவல் நிலையம் சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சென்னையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வர்கீஸ் மேற்பார்வையில் நேற்று அயனாவரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான கன்னட சங்கம் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அயனாவரம் எஸ்ஐ ஏஜாஸ் கான், பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போதை பொருட்களை பயன்படுத்தமாட்டோம், என்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், போலீசார் சேர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.



