சென்னை, டிச.10: சென்னை ஜார்ஜ்டவுனில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று பிரமிளா என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்துவதில்லை, என்றார். அதற்கு, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல்துறைக்கு 5 முறை கடிதம் எழுதியும், காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. அதனால், ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை என கூறினார். காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநகராட்சி எழுதிய கடிதம் தெளிவாக இல்லை என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் இரு துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால் அது பொதுமக்களை பாதிக்கும். அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது நிர்வாகமாகும். இந்த வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை தாமாக முன்வந்து இணைக்கிறோம். நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


