தண்டையார்பேட்டை, ஆக.8: வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர் சி.பி.ரோடு பகுதியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்றார். அப்போது, சாலையை கடந்து சென்ற பாலன் (72) என்பவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், 18 வயது பூர்த்தியடையாத சிறுவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என தெரிந்தும், பைக் ஓட்டுவதற்கு அனுமதித்த பழைய வண்ணாரப்பேட்டை சிறைச்சாலை பகுதியைச் சேர்ந்த சிறுவனின் அண்ணன் விக்னேஷ்வரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து விக்னேஷ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



