Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜன. 8: எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் நாளை முதல் காலை மற்றும் மாலை அதிக போக்குவரத்து நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும், என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ‘சென்னை பெருநகர போக்குவரத்து காவல், எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் இரண்டு ரவுண்டானாக்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த தற்காலிகமாக வரும் 9ம் தேதி முதல் அதிக போக்குவரத்து நேரங்களில், காலை 8.30 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டும் பின்வரும் மாற்றங்கள் போக்குவரத்து காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்படும்’.

ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம். மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.