ஆலந்தூர், ஆக.7: வேலை கிடைக்காததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் போலீசாரல் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டை சேர்ந்தவர் அபிநயா (21). இவர், பழவந்தாங்கலில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்து, மீண்டும் வீடு திரும்புவதற்காக பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக கவுன்டர் அருகே சென்றார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர், அபிநயாவின் கழுத்தில் கிடந்த 8 செயினை பறித்து சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அபிநயா கூச்சலிட்டார். அங்கே பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு காவலர் குமாரவேல் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்தார். பின்னர் அவரை பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில், திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் (29) என்பதும், பி.எஸ்.சி ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த இவர், வேலை தேடி சென்னை வந்ததும், ஆனால் வேலை கிடைக்காததால் செயின் பறிப்பில் ஈடுப்பட்டதாக கூறியுள்ளார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




