Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, ஜன.7: பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தேனாம்பேட்டை மண்டலம், மந்தைவெளிப்பாக்கம் ராமகிருஷ்ணா மடம் சாலையில் எம்ஆர்சி நகர் குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளது’. இதனால் நாளை காலை 10 மணி முதல் 9ம்தேதி காலை 10 மணி வரை (24 மணி நேரம்) எம்ஆர்சி நகர் குடிநீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும்.

ஆகையால் மண்டலம்-9 (தேனாம்பேட்டை) மற்றும் மண்டலம்-13 (அடையாறு)-க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (டயல் பார் வாட்டர்) குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.