Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போதையில் கார் ஓட்டியதால் சிறுவன் பலி: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

சென்னை, ஜூலை 31: மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதில் 12 வயது சிறுவன் பலியான வழக்கில் தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எம்பீ டிஸ்ட்லரீஸ் நிறுவன குழுமத்தின் தலைவரான எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு மே 22ம் தேதி மது போதையில் நண்பர்களுடன் தனது பென்ஸ் காரில் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் முனிராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில், வாசு, காஜா முகைதீன், மணி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாஜி புருஷோத்தமன், அவரது நண்பர்கள் குமார், சையது அன்வர் மற்றும் அனில் ராவ் ஆகியோரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர். இந்த வழக்கில் இருந்து சையத் அன்வரை விடுவித்தும், அனில் ராவ் மீதான வழக்கை ரத்து செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஷாஜி புருஷோத்தமன், குமார் ஆகியோர் மீதான வழக்கு சென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 29ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் ஷாஜி குற்றவாளி என்றும் குமாரை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் உத்தரவிடப்பட்டது. அன்றைய தினம், ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், உடல்நிலை காரணங்களுக்காக ஆஜராக முடியவில்லை என உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஷாஜி புருஷோத்தமன் நிவாரணம் தேடினார். பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன் அவர் சரணடைந்தார்.

ஏற்கனவே, ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி நேற்று அறிவித்தார். அதன்படி, கொலை செய்யும் உள்நோக்கமின்றி மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, ஷாஜி புருஷோத்தமனை புழல் சிறையில் அடைப்பதற்காக புழல் சிறை போலீசார் அழைத்துச் சென்றனர்.