Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் கிரஷர் நிறுவனத்தில் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

பல்லாவரம், ஜூன் 30: திரிசூலம் சத்தியா நகர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). இவர் கடந்த ஓராண்டாக அதே பகுதியில் உள்ள தனியார் கிரஷர் நிறுவனத்தில் சித்தாளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த மகேஸ்வரி கல் அரைக்கும் இயந்திரத்தில் சிறிய கற்களை வாரி போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த புடவை இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதில் கழுத்து இறுகிய மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் இது குறித்து உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த மகேஸ்வரியின் உடலை மீட்டனர். அதனை தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விபத்து நடந்த கிரஷர் நிறுவனத்தின் உரிமையாளர் வினோத்குமார் என்பவரை போலீசார் பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த மகேஸ்வரியின் கணவர் உடல்நலக்குறைவால் வீட்டிலேயே உள்ள நிலையில், அவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பது தெரியவந்துள்ளது. தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.