Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய 54ம் ஆண்டு திருவிழா: லட்சக்கணக்கானோர் திரளாக பங்கேற்பு

சென்னை பெசன்ட்நகரில் அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயம் உள்ளது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த தேவாலயம் அன்னை வேளாங்கண்ணி நல்ல ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் 1972ம் ஆண்டில் கட்டப்பட்டது. 1971ம் ஆண்டு வரை இந்த தேவாலயம் புனித லூயிஸ் தேவாலயத்தின் ஒரு துணை திருத்தலமாக இருந்தது. அப்போதைய சென்னை ஆயர் அருட்திரு டாக்டர் ஆர்.அருளப்பா இந்த திருத்தலத்தை ஒரு தனி பங்கு தேவாலயமாக மாற்றினார். பின்னர், 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஒரு பெரிய தேவாலயமாக பேராயர் அருட்திரு டாக்டர் ஆர்.அருளப்பாவால் ஆசீர்வதிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது.

அருட்தந்தை பி.ஜே.லாரன்ஸ் ராஜ் முயற்சியால் இந்த திருத்தலத்தில் பல விரிவாக்கங்களும் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 2001ம் ஆண்டில் புனித நற்கருணைக்காக ஒரு சிறிய சிற்றாலயம் கட்டப்பட்டது. நல்ல ஆரோக்கியத்தின் வேளாங்கண்ணி அன்னையின் அற்புதங்களை சித்தரிக்கும் ஒரு படம் 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அன்னை மரியாள் சதுக்கம் மற்றும் ஒப்புரவு தேவாலயம் 2003ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் 2005ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி சென்னை பேராயர் அருட்திரு டாக்டர் ஏ.எம்.சின்னப்பா எஸ்.டி.பி.யால் சென்னை பேராயத்தின் ஒரு புனித தலமாக அறிவிக்கப்பட்டது. இங்கு 3 திருப்பலி தொழுகைகள் நடத்தப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்த தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள், புனித அன்னையின் பாதங்களை தொடுவதற்காக தொழுகையின் போது நாள் முழுவதும் நின்றுகொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த 53 ஆண்டுகளாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இன்று 4.30 மணிக்கு கொடி பவனி தொடங்கும். அதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், கொடியேற்றமும் நடைபெறவுள்ளது. சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மாதாவின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றிவைக்கிறார். இதை தொடர்ந்து தினமும் காலை முதல் மாலை வரை திருப்பலிகள் நடைபெறும்.

செப்டம்பர் 7ம் தேதி அன்னை மரியாவினுடைய திருத்தேர் திருவிழா நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு தேர் பவனி தொடங்கும். செப்டம்பர் 8ம் தேதி அன்னையினுடைய பிறப்பு பெருவிழா. காலை 2 மணி முதல் திருப்பலிகள் தொடர்ந்து நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் கொடியிறக்கும் திருப்பலி நடைபெறும். அத்துடன் விழா முடிவடையும். இந்த ஆண்டு அமைதி என்ற மையக்கருத்தை வைத்து திருவிழா நடத்தப்படுகிறது. பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா திருவிழாவிற்கு சென்னை மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வேண்டுதல்களுடன் வருவார்கள். பக்தர்களுக்கு ஆலய வளாகம் மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருவிழாவை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. லட்சக் கணக்கானோர் திருவிழாவில் பங்கேற்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் கண்காணிக்க நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படவுள்ளது. நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா திருவிழாவைப்போல் பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்திலும் கடந்த 53 ஆண்டுகளாக மிக விமரிசையாக மாதா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கொடியேற்ற நாளிலிருந்து தினமும் சிறப்பு திருப்பலிகள், ஜெபமாலைகள் உள்ளிட்ட பிராத்தனைகள் நடைபெறும். திருப்பலிகளை நிறைவேற்றுவதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயர்களும், பங்கு தந்தைகளும் கலந்து கொள்கிறார்கள்.