Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை வீழ்ச்சி: அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

தண்டையார்பேட்டை, ஜூன் 29: காசிமேடு மீன்பிடி துறைமுத்தில் மீன்கள் வரத்து அதிகரிப்பு காரணமாக, விலை வீழ்ச்சி அடைந்தது. இது, வியாபாரிகள், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மீன்பிடி தடைகாலம் முடிந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீன் வாங்க அதிகாலை முதல் குவிந்தனர். காசிமேடு மீனுக்கு சென்னையில் ஏராளமான பிரியர்கள் உண்டு. மற்ற மீன்களை விட காசிமேடு பகுதியில் பிடித்துக்கொண்டு வரப்படும் மீன்கள் சுவையாகவும் புதிதாகவும் இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா தலம்போல் தங்கள் குடும்பத்துடன் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழ்கடலுக்கு சென்ற ஏராளமான விசைப்படகுகள் திரும்பி வந்தன. இவற்றில் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் விலை சரிந்து காணப்பட்டது. இருப்பினும் அதிக அளவு மீன்கள் வந்ததால் மீனவர்களும் மகிழ்ச்சியுடன் தங்களது வியாபாரத்தை தொடர்ந்தனர். பொதுமக்களும் விலை குறைந்து இருந்ததால் ஏராளமாக வாங்கிச் சென்றனர். வஞ்சிரம் கிலோ ரூ.1000, சங்கரா ரூ.400, கானாகத்தி ரூ.150, இறால் ரூ.400க்கு விற்றன. ஆயில் மீன் 400 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் விலை குறைந்ததால் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். மீன் விற்பனை செய்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் கடந்த 15ம் தேதி ஆந்திரா கடல் பகுதியில் பழுதான காசிமேடு மீன்பிடி படகுகளை அங்குள்ள மீனவர்கள் சிறைபிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற மீனவர்கள் படகுகள் தமிழகத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதில் உள்ள மீனவர்கள் பெரும்பாலும் ஆந்திரா கூலி தொழிலாளர்களர்கள். அவர்கள் தங்களது படகுகள் பழுது காரணமாகவே ஆந்திர பகுதிக்கு வந்ததாக கூறியும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. திங்கட்கிழமைக்குள் (இன்று) விடுவிக்கப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என காசிமேடு மீனவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.