Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பூரில் திமுக நிர்வாகி வீட்டில் 35 சவரன் நகை திருடுபோன வழக்கில் 2 சிறுவர்கள் கைது: வெறும் 2 பவுன் மட்டும் மீட்பு

பெரம்பூர், மே 28: பெரம்பூர் துளசிங்கம் தெருவில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (56). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு பாலகுமார் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ளனர். பாலகுமார் திருமணமாகி மனைவி மற்றும் தனது குழந்தையுடன் ராஜேஸ்வரியின் எதிர்வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ராஜேஸ்வரி திமுகவில் பொறுப்பில் உள்ளார். இவரது மகன் பாலகுமார் திமுகவில் ஐடி விங்கில் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி ராஜேஸ்வரி தனது மகளுடன் ஓசூரில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று முதல் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலை ராஜேஸ்வரி வீட்டின் உரிமையாளர் முதல் தளத்திலிருந்து பால் பாக்கெட் எடுப்பதற்காக கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது ராஜேஸ்வரியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜேஸ்வரியின் மகன் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்து உடனடியாக வருமாறு கூறியுள்ளார். பாலகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். ராஜேஸ்வரியின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவியில் இரண்டு நபர்கள் வந்து போனதற்கான அடையாளம் தெரிந்தது. அந்த நபர்களின் புகைப்படத்தை போலீசார் ராஜேஸ்வரியிடம் காண்பித்து விசாரித்தபோது, அதில் ஒரு நபர் ராஜேஸ்வரியிடம் பத்தாம் வகுப்பு டியூஷன் படித்த சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வியாசர்பாடி ராஜாஜி தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர் பெரம்பூர் பாலகிருஷ்ணன் தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என இரண்டு பேரை கைது செய்தனர்.

இதில் வியாசர்பாடியை சேர்ந்த சிறுவன் ராஜேஸ்வரிடம் டியூசன் படிக்கும்போது ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஆகியுள்ளார். ராஜேஸ்வரி அவரது வீட்டில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு சம்பவத்தன்று தனது நண்பருடன் வந்து 35 சவரன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் இவர்களை துருவித்துருவி விசாரணை செய்தபோதும் இவர்கள் நகைகளை யாரிடம் கொடுத்துள்ளோம் என்பதை கூற மறுத்து பல பொய்யான தகவல்களை கூறி அலைகழித்துள்ளனர். இதனால் இவர்களிடமிருந்து இரண்டு சவரன் தங்க நகை, 15 கிராம் வெள்ளி மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.