பல்லாவரம், ஆக.26: மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (26). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சினேகா (24). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சினேகா, தனது மகன்களை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு சினேகா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அறிந்த அவரது கணவன் செந்தில், மனைவி இறந்த துக்கத்தில் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் இறந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனைவி தூக்கிட்டு இறந்த சோகம் தாங்காமல் கணவன் தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



