சென்னை, ஆக.26: காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் அடுத்த கீழானூர் அருகே சிட்ரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்ற ரூபன் (33). இவர் அதே பகுதியில் உள்ள மின்சார வாரியத்துறை ஊழியர்களிடம் தகராறு செய்த வழக்கில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமினில் வந்துள்ளார். இவர் கடந்த 3 நாட்களாக வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது நண்பர் வெங்கடேஷ் உடன் வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாகல்மேடு பகுதியில் எதிரே காரில் வந்த கும்பல் மாரி வந்த பைக்கை இடித்து தள்ளினர். இதில் மாரியும் அவரது நண்பரும் கீழே விழுந்தனர்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கும்பல் மாரியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு காரில் ஏறி தப்பி சென்றனர். அப்போது கார் ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த மேலும் 2 பேரையும் கைது செய்து, 5 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கல் கீழானூரை சேர்ந்த தீனா (25), நரேஷ் (20), விக்கி (23), மேலானூரை சேர்ந்த பேரரசு (19), ராஜ்குமார் (20) என்பது தெரிந்தது. தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கல் காவல் நிலையம் உள்ள 2 கிலோ மீட்டர் தொலைவில் பட்டப்பகலில் படுகொலை நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே மாதத்தில் 2 கொலைகள் நடந்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது.



