ஜெயிலில் இருந்து வந்த என்னை ஏன் நேரில் பார்க்கவில்லை என தி.நகரில் 2 பள்ளி மாணவர்களை பைக்கில் கடத்தி சென்று தாக்குதல்: ரவுடி உள்பட 4 பேர் கைது
சென்னை, ஆக.28: ஜெயிலில் இருந்து வந்த என்னை, நேரில் வந்து ஏன் பார்க்கவில்லை எனக்கூறி 2 பள்ளி மாணவர்களை பைக்கில் கடத்தி சென்று தாக்கிய ரவுடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சிஐடி நகரை சேர்ந்தவர் கிஷோர் (19). இவர் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், தேர்வுக்கு படித்து வருகிறார். இவர் தனது நண்பரான சஞ்சய் என்பவருடன் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே உள்ள டீக்கடையில் தேநீர் குடித்துவிட்டு தி.நகர் 10 அடி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகர் காமராஜர் காலனி 5வது பிளாக்கை சேர்ந்த, 4 கொலை முயற்சி உள்பட 15 குற்ற வழக்கில் தொடர்புடைய ரமேஷ்குமார் (28) தனது நண்பரான 4 பேருடன் 2 பைக்கில் அந்த வழியாக வந்தனர்.
2 பள்ளி மாணவர்களை பார்த்ததும் ரவுடி ரமேஷ்குமார், பைக்கை நிறுத்திவிட்டு, ‘ஜெயிலில் இருந்து வந்த என்னை ஏன் நேரில் வந்து பார்க்கவில்லை... நான் தான் இந்த ஏரியாவுக்கு ரவுடி’ என கூறி 2 பேரையும் மிரட்டி பைக்கில் ஏற்றி கொண்டு, தி.நகர் காமராஜர் காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் அழைத்து சென்று கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதில் 2 பள்ளி மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்த பள்ளி மாணவன் லலித் கிஷோர் மற்றும் சஞ்சய் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதைதொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து மாணவன் லலித் கிஷோர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, அடிதடி வழக்கில் சிறைக்கு சென்று வந்த ரமேஷ்குமார், தன்னை பெரிய ரவுடி என்று பள்ளி மாணவர்கள் கூற வேண்டும் என்றும் அவர்களை கடத்தி சென்று தாக்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து மாணவர்களை தாக்கிய ரவுடி ரமேஷ்குமார், அவரது நண்பர்களான விக்னேஷ் (26), ரூபன் சக்கரவர்த்தி (20), ராமச்சந்திரன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.




