Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குரோம்பேட்டை கோதண்டம் நகரில் 10 நாட்களாக குடிநீர் வராததால் ஜிஎஸ்டி சாலையில் மக்கள் மறியல்: தவெக எம்எல்ஏ தொகுதிக்கு வருவதில்லை என குமுறல்

சென்னை, மே 26: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சி, 27வது வார்டு, குரோம்பேட்டை, கோதண்டம் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் தண்ணீர் பிரச்னையால் நீண்ட காலமாக தவித்து வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஏற்பாட்டில் அனைத்து தெருக்களிலும் குழாய்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்து சட்டமன்ற உறுப்பினராக காமாட்சி என்பவர் பொறுப்பேற்ற பின்னர் தொகுதிக்கு சரியாக வராததால் பொதுமக்களுக்கு தேவையான பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை எனவும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பணம் செலுத்தி லாரிகள் மூலம் தண்ணீர் பெற்று உபயோகித்து வந்தனர். தொடர்ந்து தண்ணீர் வாங்குவதற்கு பணம் செலவழிக்க முடியாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தமிழக அரசையும், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினரையும் கண்டித்து, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனக்கூறி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை மற்றும் திருநீர்மலை சாலையில் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காலை நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் குரோம்பேட்டை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், `கடந்த திமுக ஆட்சியில் எங்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் கிடைத்தது. ஆனால் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் வராததால் பொதுமக்கள் அனைவரும் சொந்தமாக பணம் திரட்டி தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் பெற்று வந்தோம். ஆனால் தொடர்ந்து பணம் கொடுத்து குடிநீர் வாங்குவதற்கு எங்களால் முடியவில்லை. இதுகுறித்து புகார் அளிக்க சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அவர் போனை எடுப்பதே இல்லை, தொகுதிக்கும் அவர் முறையாக வருவதாக தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்,’ என்றனர்.

மாமன்ற உறுப்பினர் மகேஸ்வரி கார்த்திகேயன் கூறுகையில், `கோதண்டம் நகர் பகுதியில் ஆழ்துளை கிணறு வசதி இல்லை. தண்ணீர் தேவைக்கு அப்பகுதியில் கிணறுகள் மட்டுமே உதவியாக இருந்தது. ஆனால் சென்ட் கம்பெனிகள் வந்த பின்னர் கடந்த 1987ம் ஆண்டு கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன்பின்னர் குழாய் மூலம் தான் தண்ணீர் பெறப்பட்டு வந்தது. அவ்வாறு வரும் குடிநீர் முறையாக கிடைக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உத்தரவின் பேரில், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை பூஸ்டர் அமைத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

இதனால் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னையே இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒருமுறை மட்டும் தான் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வேறு வழியில்லாமல் லாரி தண்ணீர் வாங்க தொடங்கி விட்டனர். தொடர்ந்து பணம் செலுத்தி பொது மக்களால் லாரி தண்ணீரை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. புதிய எம்எல்ஏ தொகுதிக்கு முறையாக வருவதாக தெரியவில்லை. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி குப்பைகளை முறையாக எடுத்து செல்வதில்லை என்ற புகார்களும் எழுகிறது.

இப்போது சாலை மறியல் போராட்டத்திற்கு பின்னர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டாலும் தொடர்ந்து முறையாக குடிநீர் வழங்குவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் திமுக மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளும் முறையாக பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்,’ என்றார்.