Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சென்னையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ெகாசு ஒழிப்பு பணிக்கு புதிய திட்டம்: ஊழியர்களுக்கு பயிற்சி; மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 23: சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,129 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்த பணியாளர்கள் என, மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களைக் கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, 2,073 பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணியை மேற்கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சியின் பூச்சித் தடுப்பு பிரிவு செய்து வருகிறது. மண்டல வாரியாக கடந்த 2024ம் ஆண்டில் ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய இடங்களில் மட்டுமே அதிகமாக இருந்த கொசுத் தொல்லை பாதிப்பு, கடந்த 2025ம் ஆண்டில் ஏற்கெனவே பாதித்த 4 மண்டலங்களுடன் கூடுதலாக, மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகியவற்றிலும் அதிகரித்துள்ளது தெரிய வந்தது.

கொசுக்களை அழிக்க டீசலுடன், டெக்னிக்கல் பைத்திரியம் எனும் மருந்து கலந்து தெளித்தல், கொசு முட்டைகளை கண்டறிந்து அவற்றை அழித்தல் ஆகியவை கையாளப்படுகின்றன. அதற்காக இயந்திர கைத்தெளிப்பான், சிறிய சரக்கு வாகனங்களில் மோட்டார் பம்ப் வைத்து புகையுடன் மருந்து தெளித்தல் மற்றும் ட்ரோன் மூலம் தெளித்தல் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. தற்போது கொசு மருந்து தெளிக்க 200 கைத்தெளிப்பான்கள் உள்ளன. அவற்றில் தலா 1 லிட்டர் டீசலுடன், 50 மில்லி லிட்டர் பைத்திரியம் மருந்து கலந்து புகையாக தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கைத்தெளிப்பானுக்கும் 1 மணி நேரத்துக்கு 1 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது.

தற்போது கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு அரசு ரூ.19 கோடி ஒதுக்குகிறது. அதில் கொசு ஒழிப்பு மருந்து வாங்க ரூ.8 கோடியும் இதர பணிகளுக்கு ரூ.11 கோடியும் செலவாகிறது. எனினும் கொசு மருந்து, அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் ஆஸ்துமா (மூச்சுத் திணறல்) உள்ளவர்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், புதிய கொசு ஒழிப்புத் திட்டம் சோதனை முறையில் சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சியின் பூச்சிகள் தடுப்புப்பிரிவு அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். தற்போது கொசு மருந்து தெளிக்க 200 கை தெளிப்பான்கள் உள்ளன. அவற்றில் தலா ஒரு லிட்டர் டீசலுடன் 50 மில்லி லிட்டர் பைத்திரியம் மருந்து கலந்து புகையாக தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கை தெளிப்பானுக்கும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. கொசு மருந்து தெளிக்க 94 சிறிய சரக்கு வாகனங்கள் இயங்க தினமும் ரூ.3724 மதிப்புள்ள 188 லிட்டர் டீசல் செலவிடப்படுகிறது.

அதில் உள்ள புகையுடன் மருந்து தளிப்பு சாதனம் இயங்க 94 லிட்டர் பெட்ரோல் வாங்க ரூ.9400 செலவிடப்படுகிறது. அவற்றின் மூலம் மாநகராட்சியில் தினமும் 2 லிட்டர் பைத்திரியம் மருந்தும் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய கொசு ஒழிப்பு முறையில் ஆண்டுக்கு மருந்து வாங்க ரூ.8 கோடியும் அதனை மாநகராட்சி எல்லை முழுவதும் தெளிக்க டீசல், பெட்ரோல் மற்றும் வாகன செலவு என மொத்தம் ரூ.19 கோடி வரை செலவிடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பல கோடி ரூபாய் செலவிட்டு கொசு ஒழிப்பில் ஈடுபடும்போது அந்த கொசு மருந்து மற்றும் அதல் இருந்து வெளியேறும் நச்சு புகையால் பொதுமக்கள் குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே தற்போது சென்னை மாநகர ஆணையராக பொறுப்பேற்றுள்ள சமீரன் ஆலோசனைப்படி காற்று மாசு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதே நேரத்தில் கொசுக்கள் அதன் லார்வாக்களை மட்டும் துல்லியமாக அளிக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நவீன புதிய முறை கொசு ஒழிப்பு திட்டத்திற்கு என மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய 6 க தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் டீசலுக்கு பதிலாக தண்ணீர் மற்றும் கொசு மருந்து கலந்து தெளிக்கப்படும். அதனால் மோட்டார் மூலம் புகைக்கு பதில் தண்ணீர் துளிகளுடன் மருந்து கலந்து வெளியேற்றப்படுகிறது. இது, நீண்ட நேரத்திற்கு காற்றில் தங்கியும் கொசுக்களை மட்டும் தாக்கி அழிப்பதாகவும் உள்ளது, சோதனையில் தெரியவந்துள்ளது.

குற்றச்சூழல் பாதிப்பு இல்லாத இந்த கொசு ஒழிப்பு புதிய திட்டத்தால் டீசல் செலவு குறைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும் குறைவான செலவு மட்டுமே ஏற்படும். கொசு ஒழிப்புக்கான புதிய திட்டத்தில் கை தெளிப்பான்களை பயன்படுத்துவது குறித்து கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை முதல் புதிய திட்டத்தில் கொசுக்கள் ஒழிப்பு ஒழிப்பு பணி நடைபெற உள்ளது. நாட்டில் முதன்முறையாக தண்ணீரில் கொசு மருந்து கலந்து தெளிக்கும் இந்த புதிய கொசு ஒழிப்பு திட்டம் சென்னை மாநகராட்சியில் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் கொசுக்கள் இல்லாத சென்னையாக மாறும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் கொசுக்கள் அறவே இல்லாத சென்னை என்ற மக்களின் விருப்பம் சாத்தியமாகக்கூடும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் சோதனை முயற்சியில் கடந்த 6 மாதங்களில் கொசுத் தொல்லை தொடர்பாக மாநகராட்சிக்கு வந்துள்ள புகார்களின் எண்ணிக்கை முதன்முறையாக இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.