பெரம்பூர், ஆக.18: சென்னை திரு.வி.க.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தீட்டி தோட்டம் மார்க்கெட்டில் இறைச்சி கடை வைத்திருக்கும் ஹயத் பாட்ஷா என்பவருக்கும், அவரது கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஸ்ரீசாந்த் என்பவருக்கும் இடையே கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் ஸ்ரீசாந்த் என்பவரின் உறவினர் பிரவீன் குமார் என்பவர் கறிக்கடைக்குச் சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து, கடை உரிமையாளர் ஹயத் பாஷா உள்ளிட்டவர்களை மிரட்டி உள்ளார்.
அப்போது இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பாகி உள்ளது. இதுகுறித்து இரு தரப்பிலும் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
திருவிக நகர் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் இதுகுறித்து இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து பிரவீன் குமாரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
அப்போது நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹயத் பாஷா வடசென்னை மாவட்ட கறிக்கடை உரிமையாளர் சங்கத்தில் முறையிட்டார். அதன் அடிப்படையில் நேற்று மாலை பெரம்பூர் காந்தி சிலை அருகே வடசென்னை மாவட்ட கறிக்கடை உரிமையாளர் சங்கம் தலைவர் அக்பர் தலைமையில், திருவிக நகர் இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கைது செய்யப்பட்ட பிரவீன் குமார் மீது தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை, என கோஷமிட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.



