ஆலந்தூர், ஆக. 17: ஆதம்பாக்கம், சுரேந்தர் நகரில் போதை மறுவாழ்வு மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த ஜூலை மாதம் அசோக் நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக்கூறி அவரது மனைவி சவீதா (30) சேர்த்துள்ளார். இதை அறிந்து, வெங்கடேசனின் தங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காமேஸ்வரி (34) என்பவர் தனது அண்ணன் வெங்கடேசனை தவறாக போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளதாக கூறி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருக்கும் வெங்கடேசனை விடுவிக்க கோரி, வழக்கறிஞர் காமேஸ்வரி தலைமையில் 30க்கும் மேற்பட்டவர்கள் போதை மறுவாழ்வு மையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் முற்றுகையிட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.



