பெரம்பூர், ஆக.17: பெரவள்ளூர் வெற்றி நகர் ராம் நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (40). இவருக்கு திருமணமாகி ஹரிணி பிரியா (36) என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். தனியார் கம்பெனியில் சரவணன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார். இவர், அதிக கடன் பிரச்னை காரணமாக, கடந்த சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கோபாலபுரம் பகுதியில் நடந்த இசை கச்சேரிக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சரவணன் குடிபோதையில் படுக்கை அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார்.
திருவிழாவிற்கு சென்று விட்டு அவரது மனைவி ஹரிணி பிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே சரவணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



