Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருங்குடி குப்பை கிடங்கில் தீவிபத்து: : புகை மூட்டத்தால் மக்கள் அவதி

துரைப்பாக்கம், ஜூன் 16: பெருங்குடி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்து, பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்பால் தவித்தனர். துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையை ஒட்டியுள்ள பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடக்கில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் தினசரி சேகரிக்கப்பட்டு லாரிகள் மூலம் கொண்டு வந்து இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

மேலும், சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பை கழிவுகள் தினசரி இந்த பெருங்குடி குப்பைக்கிடங்கில் தான் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு பல அடி உயரத்திற்கு குப்பை கழிவுகள் மலை போல் குவிந்துள்ளன.

ஆண்டுதோறும் கோடை காலங்களில் இந்த குப்பை கிடங்கில் குப்பை தீப்பற்றி எரிவது வழக்கம். இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு 3 நாட்களுக்கு மேல் ஆகும். மேலும், புகை மூட்டத்தால் சுற்றுப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாவார்கள். எனவே, கோடை காலங்களில் இந்த குப்பை கிடங்கு அருகே, தீயணைப்பு வாகனம் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, குப்பைமேட்டில் உள்ள கழிவுகளுக்கு இடையே ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக தீபரவி ெகாழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து திருவான்மியூர், தாம்பரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியத்தில் இருந்து தண்ணீர் லாரிகள் வர வைக்கப்பட்டது. குப்பை மேட்டின் அடிப்பகுதி வரை தீ பரவியுள்ளதால், தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். தீ பற்றிய இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பையை அகற்றியும் வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கடுமையான புகை மூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் சுவாசப் பாதிப்பு மற்றும் கண் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கரணை காவல்நிலைய போலீசார் தீபற்றியதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.